புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றபோது அவர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அவர் கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டத்தை சிஜேபி கட்சியினர் தொடங்கினர். இதற்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்த நிலையிலும் இதில், இளைஞர்கள், பெண்கள் என 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. போராட்டக்காரர்கள், போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. மற்றொருபுறம், தீவிரமடைந்த இப்போராட்டத்தை தணிக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் அவரது இல்லத்தில் நேரில் சந்தத்துப் பேசினர். சுமார் 2 மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு நடைபெற்ற இந்த 10 நிமிடச் சந்திப்பின் போது, கட்சியின் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனு மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
3 முக்கியக் கோரிக்கைகள்
மருத்துவப் பரிசோதனைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.
இந்தக் கோரிக்கைகள் குறித்து பாஜகவின் உயர்மட்டத் தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்ததாக அக்கட்சியின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய டெல்லியின் சில பகுதிகளில் மொபைல் இணைய சேவை நேற்று துண்டிக்கப்பட்டது.
மேலும் ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம், சேவா தீர்த் ஆகிய 5 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சோனம் வாங்சுக் நிபந்தனை
இதனிடையே இந்த போராட்டத்தில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என வாங்சுக் மருத்துவமனை நிர்வாகத்துக்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதினார். கடிதத்தில், “தேர்வு முறைகேடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்; அல்லது நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் குரல் எழுப்புவார்கள் என உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் எனது உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகை நாடாளுமன்ற வாயில்கள் மூடல்
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து சிஜேபி கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணி சென்றபோது, நாட்டின் முக்கிய அடையாளப் பகுதிகளாக திகழும் நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் அதிரடியாக மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.
சிஜேபி நிறுவனர் கைது? - பேரணியைக் கட்டுப்படுத்தவும், போராட்டம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே (30) கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இருப்பினும். இதனை டெல்லி காவல் துறை மறுத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இச்சம்பவத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘நியாயமான கோரிக்கைகளுக் காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியிருப்பது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயல். அரசு அடக்குமுறையைக் கைவிட்டு மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்’’ என்றார்.