கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 34-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
படம்: சிவகுமார் புஷ்பாகர்.
புதுடெல்லி: சிஜேபி போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 34-வது நாளாக சிஜேபி போராட்டம் நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிஜேபி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் கவுரவ் தாஸ், ஜந்தர் மந்தரில் கூறும்போது, “யாருடைய வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் ஜந்தர் மந்தருக்கு வரலாம் அல்லது பொதுவான ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்றார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: “போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அமைச்சர் ஜே.பி.நட்டாவின் வீடு, அலுவலகம் திறந்தே இருக்கிறது. சிஜேபி போராட்ட குழுவினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போராட்டக் குழுவினர் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். மத்திய அரசின் அழைப்பை போராட்டக் குழுவினர் ஏற்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன. நேற்று ஜன்டேவாலன் மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டதையடுத்து இதுவரை 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லி மட்டுமன்றி மும்பை, கொல்கத்தா, நாசிக், சண்டிகர், சூரத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா டெல்லியில் நேற்று கூறியதாவது: “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவிசாய்க்க கோருகிறோம். சிஜேபி சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி
இதன்படி நாடு முழுவதும் ஒவ்வொரு நகரம், கிராமத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டுகிறோம். மாணவர் அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் தங்களது ஊரில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மீது வாங்சுக் மனைவி புகார்- சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கூறியதாவது: “மாணவர்களின் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. குறிப்பாக கடந்த 21-ம் தேதி பிரதமரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் நடத்திய போராட்டம் உள்நோக்கம் கொண்டது. மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் அவர்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்காமல் சுயலாபத்துக்காக பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். எனது கணவர் சோனம் வாங்சுக்கின் செல்வாக்கு மூலம் ஆதாயம் அடையவும் சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.” இவ்வாறு கீதாஞ்சலி தெரிவித்தார்.