இந்தியா

‘ஓராண்டு வரை அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது’ - நிபந்தனை ஜாமீனில் சிஜேபி நிர்வாகிகள் விடுதலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே உட்பட 3 நிர்வாகிகள் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி ஓராண்டு வரை மூவரும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால், கடந்த முறை டெல்லியில் சிஜேபி நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லிக்கு வந்த போது விமானத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

பிஎன்எஸ் பிரிவு 126 (அமைதியைப் பேணுவதற்கான நடவடிக்கை) பிரிவு 170 (குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க கைது செய்தல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸார் விளக்கம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3 பேரும் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதன்படி அடுத்த ஓராண்டுக்கு 3 பேரும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு உள்ளது. மூவரும் தலா ரூ.50,000 பிணைத் தொகை செலுத்திய பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாகச் சட்ட நிபுணர்கள் கூறியதாவது: ஓராண்டு வரை அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்த பிறகு அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இனிமேல் போலீஸார் அனுமதி வழங்கிய போராட்டங்களில் மட்டுமே மூவரும் பங்கேற்க முடியும்.

சட்டவிரோதப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது. போலீஸ் அனுமதியுடன் நடைபெறும் போராட்டங்களில் எதிர்பாராதவிதமாக வன்முறை வெடித்தால் 3 பேரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கேவின் பாட்டி சாவித்ரிபாய் நேற்று முன்தினம் காலமானார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டம், சந்துக்பிம்ப்ரி கிராமத்தில் நேற்று காலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. காலை 10 மணிக்கே அபிஜித் திப்கே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரால் பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை.

SCROLL FOR NEXT