புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கான 'இசட் பிளஸ்' பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கூடுதல் படைப் பிரிவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 13 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் இதற்கு பொறுப்பு என்றும் கூறி வரும் எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதனால், ஞானேஷ் குமாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு 'Z+' பாதுகாப்பு உள்ள நிலையில், தற்போது கூடுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மோதி பாக் காலனியில் உள்ள ஞானேஷ் குமாரின் இல்லம், தேர்தல் ஆணைய அலுவலகம் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான தற்போதைய போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்றும், மாறாக அவரது பாதுகாப்புக்கான சூழல் மற்றும் அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.