புதுடெல்லி: அசாமிய வைணவ இலக்கியங்களைத் தமிழில் வெளியிட 15 நாள் பயிலரங்கம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் துவங்கியது.
சென்னையில் இயங்கும் மத்திய அரசின் சிஐசிடி இந்தியாவின் பெரும்பாலான மொழிகளை தமிழுடன் இணைக்கும் பணியைச் செய்கிறது. இதற்காக, குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் ‘அசாமிய வைணவ இலக்கியங்களைச் செம்மொழித் தமிழில் மொழிபெயர்த்தல்’ எனும் தலைப்பில் ஒரு சிறப்புப் பயிலரங்கம் துவங்கி உள்ளது.
இப்பயிலரங்கை குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத்துறையுடன் இணைந்து சிஐசிடி நடத்துகிறது. அசாமின் செழுமையான வைணவ இலக்கிய மரபைச் செம்மொழித் தமிழில் மொழிபெயர்ப்பதன் வழியாக இரு பகுதிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க இலக்கியப் பாலம் ஒன்றை உருவாக்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
பயிலரங்கில் உரையாற்றிய குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நனி கோபால் மஹன்தா, ‘அசாம் மற்றும் தமிழ்நாட்டு வைணவ மரபுகளுக்கு இடையிலான பண்பாட்டு மற்றும் அறிவுசார் தொடர்புகள் ஆழமாக உள்ளன’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சிஐசிடி இயக்குநரான பேராசிரியர் இரா.சந்திரசேகரன், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறுகையில், ‘மகாபுருஷ ஸ்ரீமந்த சங்கரதேவர் மற்றும் மாதவதேவரின் படைப்புகளால் முதன்மையாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான வைணவ இலக்கிய மரபு அசாமுக்கு உண்டு.
அவர்களின் இலக்கியப் படைப்புகள், பக்தித் தத்துவம், பாடல்கள், நாடகப் படைப்புகள் அசாமின் பண்பாட்டு அடையாளத்தை வடிவமைப்பதில் ஆழமான பங்காற்றியுள்ளன. இப்படைப்புகளைச் செம்மொழித் தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம், அசாமின் அறிவுசார், ஆன்மிக மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ் அறிஞர்களும் வாசகர்களும் அறிந்துகொள்ள வழிபிறக்கும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் திலீப் போரா வரவேற்புரை நிகழ்த்த, முனைவர் துர்ஜ்ஜடி சர்மா அறிமுக உரை வழங்கினார். குவாஹாட்டி பல்கலைக்கழகத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பி.விஜயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.