புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்தார். அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
அதேபோல் சீனத் தரப்பில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், சீனா அதை மறுத்தது. கல்வான் மோதலுக்குப் பிறகு இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் சீன அதிபர் ஜின்பிங் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரவில்லை.
இதற்கிடையில் இருதரப்பில் தூதரக உறவை மேம்படுத்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து பேச சிறப்பு பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - சீனா உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்ல வாய்ப்புள்ளது. அப்போது சீன அதிபரின் வருகை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தால், இருதரப்பு தூதரக உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.