காத்மாண்டு: ‘அடுத்த சில நாட்களில் பெரிய ஏரி உடையும் அபாயம் உள்ளதால், நேபாளத்தில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது’ என சீனா எச்சரித்துள்ளது.
நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன நீர்வளத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்ப் ஒன்றில், ‘சீனா, நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மிகப் பெரிய ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரி தற்போது நிரம்பி வழிகிறது. அடுத்த சில நாட்களில் ஏரி உடையும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நேபாளத்தின் போட்டேகோசி, திரிசூலி மீண்டும் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையின் எதிரொலியாக, காரணமாக போட்டேகோசி, திரிசூலி நதிகளின் கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது.
சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து சீனாவின் திபெத் பகுதி போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதே நதி நேபாளத்தில் போட்டேகோசி என்றழைக்கப்படுகிறது.
திபெத்தில் இருந்து சீறிப் பாய்ந்த வெள்ளம் நேபாளத்தின் போட்டேகோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. இதன் காரணமாக கடந்த புதன்கிழமை காலை நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இரு மாவட்டங்களில் உள்ள 13 நீர் மின் நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் நேபாளத்தின் நேத்ராவதி - ரசுவாகதி இடையிலான 42 கி.மீ. நீள சாலை, சியோப்ருபேசியில் உள்ள 16 கி.மீ. நீள சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளன. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நேபாள நதிகளில் வெள்ளம் பாய்ந்ததால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இமயமலைப் பகுதியில் 4.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிமலைகள் உடைந்து நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தீவிர ஆய்வில் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனிமலை உடைந்தே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.