புதுடெல்லி: மேற்கு ஆசியப் போரால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: உலகம் முற்றிலுமாக மாறிக் கொண்டிருக்கிறது. குளோபல் சவுத் நாடுகளின் வலிமை அதிகரித்து வருகிறது.
பன்முகத்தன்மை கொண்ட உலகம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஓர் உண்மையான, நேர்மையான சக்தியாக பிரிக்ஸ் உருவெடுத்து, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பாடுபட்டு வருகிறது.
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பனிப்போர் மனநிலையைக் கைவிட வேண்டும். மேற்கு ஆசிய போரால் அந்த பிராந்திய மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் போரால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும்போது, “பிரிக்ஸ் கூட்டமைப்பு எந்தவொரு நாட்டுக்கும் எதிரி கிடையாது. அனைவரையும் அரவணைத்துச் செல்லவே பிரிக்ஸ் விரும்புகிறது" என்று தெரிவித்தார்.