புதுடெல்லி: இந்திய - சீன மோதலின் போது, சீனாவின் டாங்குகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி நரவனே தனது நூலில் கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மக்களவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் பேச எழுந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேச பக்தியற்ற கட்சி என்ற பாஜகவின் குற்றச்சாட்டு முதலில் பதில் அளிக்க விரும்புவதாக கூறினார்.
டோக்லாமில் ஒரு முகட்டை கைப்பற்ற 4 சீன டாங்குகள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே தனது நூலில் கூறியுள்ளதாக ராகுல் குறிப்பிட்டார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தப் புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அதன் அடிப்படையில் ராகுல் பேச முடியாது” என்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “செய்தித்தாள், துணுக்குகள், புத்தகங்கள் மற்றும் நம்பகத்தன்மையற்ற இதுபோன்ற பிற விஷயங்களை அவையில் மேற்கோள் காட்ட முடியாது என விதிகளும் மரபுகளும் உள்ளன. எனவே உங்கள் உரையில் இப்பகுதியை நீங்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.
இதற்கு ‘தி கேரவன்’ பத்திரிகையில் வெளியான அந்தப் புத்தகத்தின் பகுதிகள் 100% உண்மையானவை என்று ராகுல் காந்தி வாதிட்டார். இதையடுத்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு அரசு பதில் அளிக்கட்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால், ஓம் பிர்லாவும், பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், ஒரு புத்தகத்தில் இருந்து அவ்வாறு மேற்கோள் காட்டுவதற்கு எதிரான அவை விதிகளைக் குறிப்பிட்டனர். அது வெளியிடப்பட்டிருந்தாலும் கூட, அவையின் நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத எந்தவொரு புத்தகத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுவது அனுமதிக்கப்படாது என ஓம் பிர்லா கூறினார்.
அப்படியென்றால் குறைந்தபட்சம் அதைப்பற்றி விவரிக்கவாவது என்னை அனுமதிக்க வேண்டும் என்ற ராகுல் மீண்டும் ‘சீன டாங்குகள்’ பற்றி பேசத் தொடங்கினார். உடனே ராஜ்நாத் சிங் மீண்டும் எழுந்து, “இது சபையை தவறாக வழி நடத்தும் ஒரு முயற்சி” என்றார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் தனது எக்ஸ் பதிவில், “இந்த போலி தேசியவாத அரசு தனது திறமையின்மையின் உண்மை வெளிவருவதை பார்த்து மிகவும் பயந்து, ராகுல் காந்தி பேசுவதை தடுக்க மூத்த கேபினட் அமைச்சர்களை நியமித்துள்ளது. நடைமுறை விதிகளை அப்பட்டமாக தவறாகப் புரிந்து கொள்வதன் மூலம், சீனாவுக்கு எதிரான மோதலில் அரசு தனது இமாலய தவறுகள் பற்றி அவையும் இந்திய மக்களும் அறியவிடாமல் செய்கிறது” என்று கூறியுள்ளார்.