புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பணியாற்றினார்.
அப்போது ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலு குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி, மகன் தேஜஸ்வி உள்ளிட்ட 103 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் 4 பேர் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து வரும் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.