திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தனது புதுப்பள்ளி தொகுதியில் தனக்கு 10,000 வாக்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் கூறினார்.
மொத்தம் 140 இடங்களை கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று கூறியதாவது: எஸ்ஐஆர் காரணமாக எனக்கு சுமார் 10 ஆயிரம் வாக்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் பலருடன் நான் கலந்துரையாடியபோது இதை நான் உணர்ந்தேன். எனக்கு வாக்களிக்க விரும்பியதாகவும் ஆனால் வாக்குச் சாவடிக்கு சென்றபோது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றும் பலர் என்னிடம் கூறினர்.
எஸ்ஐஆர் எனக்கு வாக்குகள் இழப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பலருக்கு வாக்குரிமையை மறுத்துள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கம் முதலாகவே நான் எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்தேன். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். என்றாலும் எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.