இந்தியா

காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டு கால தலைமை அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் 24, அக்​பர் சாலை​யில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்தை வரும் சனிக்​கிழமைக்​குள் காலி செய்​யு​மாறு மத்​திய அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ள​து.

கடந்த 48 ஆண்​டு​களாக காங்​கிரஸ் கட்​சி​யின் தலைமை அலுவலக​மாக அக்​பர் சாலை பங்​களா செயல்​பட்டு வரு​கிறது. இந்நிலை​யில், கடந்த ஆண்​டு​தான், கோட்லா மார்க் பகு​தி​யில் 'இந்​திரா பவன்' என்ற புதிய தலைமை அலு​வல​கத்தை காங்​கிரஸ் கட்சி திறந்​தது. இருப்​பினும், அக்​பர் சாலை அலு​வல​கம் இன்​னும் காலி செய்​யப் ​ப​டவில்லை. இந்த அலு​வல​கம் மட்​டுமின்​றி, 5, ரைசினா சாலை​யில் உள்ள இளைஞர் காங்​கிரஸ் அலுவலகத்தையும் காலி செய்​யு​மாறு அக்​கட்​சிக்கு அறிவுறுத்தப்பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

          

இதையடுத்​து, சட்​ட ரீ​தி​யான தீர்​வு​களைக் காண்​பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோ​சித்து வரு​வ​தாகத் தகவல்​கள் வெளியாகி உள்​ளன. ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில், வைஸ்ராய்லின்​லித்கோ பிரபு​வின் நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக இருந்த சர் ரெஜி​னால்ட் மேக்​ஸ்​வெல்​லின் இல்​ல​மாக இது இருந்தது.

அதன்​ பின்​னர், 1960-களின் தொடக்​கத்​தில், இந்​தி​யா​வுக்கான மியான்​மர் தூதர் டாவ் கின் கியி இங்கு வசித்​தார். நோபல் பரிசு பெற்ற அவரது மகள் ஆங் சான் சூகி, தனது இளமைக் காலத்​தின் சில ஆண்​டு​களை இந்த இல்​லத்​தில்​தான் கழித்​தார்.

காங்​கிரஸ் கட்சி 1977-ல் நடை​பெற்ற தேர்​தலில் தோல்​வியடைந்து பிளவுபட்​ட​போது, இந்​திரா காந்தி தலை​மையி​லான அணிக்கு அலு​வல​கம் தேவைப்​பட்​டது. அப்​போது இந்​திராவின் தீவிர விசுவாசி​யான மாநிலங்​களவை உறுப்​பினர் ஜி. வெங்​கட​சாமி, தனக்கு ஒதுக்​கப்​பட்​டிருந்த இந்த அரசு பங்​களாவை வழங்​கி​னார்.

அதன் பிறகு, ராஜீவ் காந்​தி, பி.​வி. நரசிம்ம ராவ், மன்​மோகன் சிங் ஆகியோர் பிரதமர்​களாக இருந்த காலம் முழு​வதும் 48 ஆண்டுகளாக இதுவே காங்​கிரஸ் கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ முகவரி​யாகத் திகழ்ந்​தது. தற்​போது புதிய கட்​டிடம் கட்டப்பட்டுள்ள நிலை​யில், இந்த அலு​வல​கத்தை காங்​கிரஸ் கட்​சி காலி செய்​ய வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT