புதுடெல்லி: உள்நாட்டில் வெங்காய விலை மீண்டும் உயர்ந்து வரும் சூழலில், அதன் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை விரைவாக எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்களை மத்திய அரசு நேற்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது. மராத்தி மொழியில் கந்தா என்றால் வெங்காயம் என்று பொருள்.
அரசு தரவு அறிக்கையின்படி, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை ரூ.42-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 45 சதவீதமும், கடந்த மாதத்தை விட 19 சதவீதமும் அதிகமாகும். உற்பத்தி குறைவு மற்றும் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். தற்போதைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 வரையிலும், சென்னையில் ரூ.58 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி சமையலில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, குடும்பப் பட்ஜெட்டைப் பாதிப்பதுடன் உணவுப் பணவீக்கத்தையும் அதிகரிக்கும். இதனால், நிலைமை மேலும் தீவிரமடையும் முன்பே விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிறப்பு ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, அரசு தன்னிடம் உள்ள அவசரகாலக் கையிருப்பு வெங்காயத்தையும் சந்தைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவும் நகரங்களுக்கு இந்த வெங்காயத்தை உடனடியாக அனுப்பும்போது சில்லறை விற்பனை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஜூலை மாதத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தின் விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,875-லிருந்து ரூ.2,125-ஆக (13% உயர்வு) மத்திய அரசு உயர்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காய உற்பத்தி மையங்களில் இருந்து பயன்பாடு அதிகம் உள்ள பெரிய நகரங்களுக்கு ரயில்கள் மூலம் பெருமளவில் வெங்காயத்தைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமாக சரியாகி விலை படிப்படியாகக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.