பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, இன்று, தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அத்வானி, 1927 நவம்பர் 8-ம் தேதி தேவ் தீபாவளி நன்னாளில் பிறந்தார்.
1947-ம் ஆண்டு, தனது இளம் வயதில், சிந்துவில் தனக்குப் பழக்கமான வாழ்விடத்தையும் சூழலையும் விட்டுப் பிரிய வேண்டிய வேதனையை அவர் அனுபவித்தார்.
இருப்பினும், எவ்விதக் கசப்புணர்வும் இன்றி, பூஜ்ஜியத்திலிருந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொண்டார். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு, அடிப்படையிலிருந்து ஒன்றை உருவாக்கும் இந்தப் பண்பு, அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளது.
ஜனசங்கத்தை வலுப்படுத்தியபோதும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி வளர்த்தபோதும் இந்தப் பண்பு வெளிப்பட்டது. அத்வானியை ஒரு தனித்துவமான தலைவராக, எப்போதும் இரண்டு பண்புகள் அடையாளப்படுத்துகின்றன.
முதலாவது, அவரது கொள்கைத் தெளிவும், அறிவுக்கூர்மையும். அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் இப்பண்புகள் வெளிப்பட்டன. 2-வது, இந்திய அரசியல் களத்தின் பெரும்பான்மையான பிரிவினரால் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போலி மதச்சார்பின்மையை அவர் அம்பலப்படுத்திய விதம்.
அத்வானி தனக்கு ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கவனத்துடனும் நிறைவேற்றினார். ஆர்எஸ்எஸ் தொண்டராகத் தனது பணியைத் தொடங்கிய அவர், முதலில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
அங்கிருந்து தலைநகர் டெல்லிக்குச் சென்ற அவர், வாஜ்பாயுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கினார். இருவரும் இணைந்து இந்திய அரசியலின் போக்கையே மாற்றியமைத்தனர்.
அத்வானியின் நாடாளுமன்றப் பயணம் 1970-ம் ஆண்டில் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவராகவும், ஆளுங்கட்சி உறுப்பினராகவும் அவர் தனித்துவமான முத்திரையைப் பதித்தார்.
அவசரநிலைக் காலம், அத்வானி வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காப்பதிலும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதிலும் அவர் முன்னிலை வகித்தார்.
அவசரநிலைக் காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள், ‘ஒரு கைதியின் குறிப்பேடு’ என்ற அவரது நூலில் இடம்பெற்றன.
1977-ல் ஜனதா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அத்வானி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இத்துறையில் அவர் ஆற்றிய பணிகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
துணைப் பிரதமராகவும், நீண்டகாலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்களில் ஒருவராகவும், நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
அத்வானியின் வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்று, சோமநாதர் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை நடைபெற்ற ரத யாத்திரையாகும்.
இது, இந்தியச் சமூகத்தின் போக்கில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்திய மக்களின் ஆசியு டன், பகவான் ராமருக்கான பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பப்பட்டது.
அத்வானியை கவுரவிக்கும் வகையில், 2024-ம் ஆண்டு இந்திய மக்களின் சார்பாக அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
அத்வானி தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த சிறப்பான தருணத்தில், அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் நீடுழி வாழவும், எப்போதும் போல நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கவும் இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
- பிரதமர் நரேந்திர மோடி