இந்தியா

“மோடி, அமித் ஷா சதி... ஞானேஷ் குமார் உடனே பதவி விலக வேண்டும்” - ராகுல் காந்தி

மோகன் கணபதி

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் நடைமுறை மற்றும் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இது, தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் பலவும் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்காளர்களின் சக்தி வலுவாக இருந்துள்ளதை பல தேர்தல்கள் வெளிப்படுத்தி உள்ளன. வங்கதேச போரில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி அரசு கூட, அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது. பல தலைவர்கள் விஷயத்தில் இது நடந்துள்ளது.

தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமல்லாது, பிராந்திய அளவிலான தேர்தல்களிலும் இது நிகழ்ந்துள்ளது. பல மாநில கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளன.

ஏனெனில், ஜனநாயகத்தில் அதிருப்தி வாக்காளர்களின் சக்தி அத்தகைய வலிமையைக் கொண்டுள்ளது.

ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா, பாஜக விஷயத்தில் அதிருப்தி வாக்காளர்களின் சக்தி மறைந்து விட்டதைப் பார்க்க முடிகிறது. அவர்களால் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது. வாக்குப் பதிவுக்கு முன்பாகவே அவர்கள், வெற்றியை ஆணித்தரமாக அறிவிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டுவிட்டது:

நமது அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு இனி அதிகாரம் இல்லை. அது செயல்படவில்லை. நமது நிறுவனங்களும் அர்த்தமற்றதாக மாறியுள்ளன. இது ஒவ்வொரு இந்தியரின் கருத்து வெளிப்பாடு தொடர்பான அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ​​நமது வாக்குப்பதிவு முறையில் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் பாதிப்புக்கு அவரே காரணம் என்று மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் கூறுகின்றனர்.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சதியின் உச்சத்தில் அவர்கள் இருவரும் உள்ளனர்.

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைத் தாக்கி அழித்துவிட்டனர். இந்தியாவின் வாக்குரிமையை அழிப்பவர் ஒரு தேசத் துரோகி. இது இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான செயல். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தேர்தலைத் திருடுவதற்கான சதித்திட்டம் தொடர்பாக மோடி மற்றும் அமித் ஷா மீது விசாரணை நடத்தப்படும். ஜனநாயகத்தை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அமைதியாகவும் இருக்க மாட்டோம்.

இரண்டு தேர்தல் ஆணையர்களும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளனர். ஞானேஷ் குமார், குற்றத்தை ஒப்புக்கொண்டு 'அப்ரூவர்' ஆக மாற வேண்டும். அது நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

‘வாக்குத் திருட்டு’ என்பதிலிருந்துதான் ‘சட்டத் திருட்டு’ உருவாகிறது என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். வாக்கு திருடப்பட்டால் சட்டக் கட்டமைப்பே இல்லாமல் போய்விடுகிறது. அந்தச் சட்டத் திருட்டிலிருந்துதான் நிறுவனங்கள் தொடர்பான சிக்கல்கள் எழுகின்றன. இதுவே தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வாகும்.

இன்று வாக்கு பறிபோய்விட்டது. சட்டமியற்றும் அமைப்பும் இல்லாமல் போய்விட்டது. வாக்குகள் திருடப்பட்டு, அந்தத் திருடப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தால், அவர்கள் இயற்றும் எந்தவொரு சட்டமும் சட்டவிரோதமானதாகவே அமையும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT