புதுடெல்லி: நாடு முழுவதும் முறையான மருந்து சீட்டுகள் இல்லாமல் அட்டவணை எச், எச்1 மற்றும் எக்ஸ் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மருந்துக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
ஒரு சில மருந்து கடைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றன. அவை போதைக்காவும், தற்கொலைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க மருந்துக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருந்துக் கடைகளில் அட்டவணை எச், எச்1 மற்றும் எக்ஸ் மருந்துகளின் விற்பனை மற்றும் விநியோகத்தைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவதற்கான ஒரு கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கையாக, கட்டாய சிசிடிவி கண்காணிப்பு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த பரிந்துரை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சகம் கோரியுள்ளது.
கருத்துகளையும் பரிந்துரைகளையும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத் தின் துணைச் செயலாளருக்கு (மருந்துகள்) அனுப்பலாம் அல்லது drugsdiv-mohfw@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அட்டவணை எச், எச்1 மற்றும் எக்ஸ் மருந்துகள் என்றால் என்ன?
அட்டவணை எச் மருந்துகள் என்பவை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் மருந்துச்சீட்டின் மூலம் மட்டுமே விற்கக்கூடிய மருந்துகளாகும். அட்டவணை எச்1 என்பது அதன் துணைப் பிரிவாகும், அட்டவணை எக்ஸ் என்பது, குறிப்பிட்ட பழக்கத்தை உண்டாக்கும், மனோவியல் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட மருந்துகளை உள்ளடக்கியது.