கோப்புப் படம்

 
இந்தியா

தொடரும் மேற்காசிய பதற்றம்: பிரதமர் தலைமையில் கூடுகிறது பாதுகாப்பு அமைச்சரவைக் குழு

மோகன் கணபதி

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று இரவு 7 மணிக்குக் கூட இருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப். 28-ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கின. இதில், அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

          

கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை சர்வதேச அளவில் கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களை பல்வேறு நாடுகளும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதர் மோடி தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளைக் கையாளும் பல மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மேற்காசியாவில் தொடரும் போர், அது ஏற்படுத்தி வரும் தாக்கங்கள், இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடியது. இதில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழல் குறித்தும், இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரவாக விளக்கினார்.

இதன் தொடர்ச்சியாக இந்த போர் உலகப் பொருளாதாரத்தின் மீது குறுகிய, நடுத்தர, நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா மீதான அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டன. மேலும், அவற்றை எதிர்கொள்வதற்கான உடனடி மற்றும் நீண்ட கால தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த மார்ச் மாதத்​தில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.51 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, வெளிநாட்டு முதலீட்​டாளர்​கள் கடந்த ஒரு மாதத்​தில் மட்டும் சுமார் ரூ.1.2 லட்​சம் கோடி மதிப்​பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்​பப் பெற்​றுள்​ளனர்.

SCROLL FOR NEXT