ஹைதராபாத்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் மேலவை உறுப்பினரான கவிதாவுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்மன் வழங்கினர்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், நிஜாமாபாத் முன்னாள் மேலவை உறுப்பினருமான கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். அங்கு சிபிஐ நீதிமன்றத்தில் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
சுமார் ரூ.100 கோடி வரை நடந்த ஊழலில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், இதில் கவிதாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி, சிபிஐ நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதைத் தொடர்ந்து தனது தந்தையின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறி, விரைவில் புதிய கட்சியை தொடங்க உள்ளார் கவிதா.
இதையடுத்து வழக்கில் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது குடும்பத்தாருடன் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையானை மலையேறி சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடனையும் நிறைவு செய்தார்.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் அவரது வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக கூறி, அதற்கான சம்மனை கவிதாவிடம் வழங்கினர். இது தொடர்பாக தனது வழக்கறிஞர்களை சந்தித்து பேசி, சட்டப்படி இதனை எதிர்கொள்வேன் என்று கவிதா தெரிவித்துள்ளார்.