ஓய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங்கை | நடிகை ட்விஷா சர்மா |
போபால்: தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மச்சாவு வழக்கில் அவரது மாமியாரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங், முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின் பெற்றோர் கூறிய தொடர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனிடையே தலைமறைவாக இருந்த ட்விஷாவின் கணவர் சமரத் சிங் ஜபல்பூரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் நீதிபதியும், ட்விஷாவின் மாமியாருமான கிரிபாலா சிங்கிடம் விசாரணை நடத்த போபாலில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று சிபிஐ அதிகாரிகள் குழு சென்றது. இதைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கிரிபாலா சிங் பதில் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் சிபிஐ வட்டாரங்ள் தெரிவித்தன. விசாரணையின் முடிவில் நேற்று மாலை கிரிபாலா சிங்கை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் கிரி பாலா சிங், முன்ஜாமீன் மனுவைப் பெற்றிருந்தார். இந்நிலையில் கிரி பாலா சிங்கின் முன்ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. முன் ஜாமீன் ரத்தான மறுநாளே ஓய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.