

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சமூகநீதியை காக்கும் நோக்குடன், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2-ம் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கர்நாடக அரசு நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.
கர்நாடகத்தில் ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டில் முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அம்மாநில அரசு மேற்கொண்ட நிலையில், அதன்பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி முதல் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடைந்தது. அதில் கிடைத்த தரவுகள் தொகுக்கப்பட்டு அதன் அறிக்கை அம்மாநில முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுபோல தமிழகத்திலும் சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
வழக்கு தொடரப்படலாம்
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அதை எதிர்ப்பதற்காக சமூகநீதியின் எதிரிகள் முன்வைத்த காரணங்கள் அப்படியே இருப்பதால், எந்த நேரமும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம்.
அதை எதிர்கொள்ளவும் சமூகநீதி கணக்கெடுப்பு அவசியம். எனவே, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த முதல்வர் விஜய் ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
பணிகளை நிறுத்த கோரிக்கை
சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.30 கிமீ தொலைவுக்கு உயர் மட்ட பாலம் அமைப்பதற்காக கடந்த பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்ற நிலையில், திட்டத்துக்கான மதிப்பீட்டில் 50 சதவீதம் வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களை வழங்கியது.
இந்நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இப்பணிகளை உடனடியாக நிறுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
மேலும், இப்பணிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.