இந்திய தேர்தல் ஆணையம்

 
இந்தியா

தேர்தலையொட்டி ரூ.650 கோடி மதிப்பிலான ரொக்கம், போதைப் பொருள் பறிமுதல்

தேர்தல் ஆணையம் அதிரடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகம் உள்ளி ட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.650 கோடி மதிப்பிலான ரொக்கம், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக ரூ.319 கோடி மதிப்பிலான சட்டவிரோத ரொக்கம், போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ரூ.170 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

          

வாக்காளர்களைக் கவரும் வகையில் விநியோகிக்கப்படவிருந்த சட்டவிரோதப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய 5,173 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலையான கண்காணிப்புக் குழுக்கள்: இது தவிர, மாநிலங்களின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் திடீர் வாகனத் தணிக்கை மேற்கொள்வதற்காக 5,200-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளம், அசாம், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளன. மேலும், 6 மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே வெளியாக உள்ளன.

SCROLL FOR NEXT