புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை நாளைக்கு (15-ல்) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணை நடைபெறவிருந்த நிலையில், நீதிபதி வி. மோகனா விடுமுறை எடுத்ததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டங்களின்போது மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படும் புகார்கள் தொடர்பாக வழக்குகளில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது.