சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ்

 
இந்தியா

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு

மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் சர்மா என்ற சவுரவ் தாஸ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்.

அவர் தனது முன்னோர்களின் நாடுகளான நேபாளம், பூடான், பாகி்ஸ்தான் உள்ளிட்ட வேறு எந்த நாடுகளின் நீதித்துறை குறித்தும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் செயல்.

சவுரவ் தாஸின் வம்சாவளி நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவதால் அவர் மற்றும் அவரது தாய் சீமா சேத்ரி, அவரது தந்தை பிஜய் சர்மா ஆகியோரது குடும்ப பின்னணி குறித்தும், அவர்கள் அனைவரும் உண்மையில் இந்தியர்களா என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஒருவேளை அவர்கள் நேபாளத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பது உண்மை என்றால், இந்த உண்மைகளை மறைத்து, இந்தியாவில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெற்று மோசடி செய்தது குறித்தும் விசாரணை நடத்தி அவற்றை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் நாட்டின் நீதித்துறையை அவதூறாக விமர்சிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து வங்கி கணக்குகளையும் ஆராய உத்தரவிட வேண்டும். அத்துடன் அவரது பெயரி்ல் உள்ள அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு 6 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT