இந்தியா

உ.பி அரசு விருந்தினர் மாளிகையில் தொழுகை: சமாஜ்வாதி கட்சி பிரமுகரின் உறவினர் மீது வழக்குப் பதிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச அரசு விருந்தினர் மாளிகையில் சமாஜ்வாதி கட்சி பிரமுகரின் உறவினர் தொழுகை நடத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி, அவர் மீது முராதாபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யின் முராதாபாத்தில், சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் துணைத் தலைவராக முகமது உஸ்மான் உள்ளார். சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரான லால் பிஹாரி யாதவ், கடந்த வியாழக்கிழமை அன்று அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்திருந்தார். அப்போது எம்எல்சி (சட்ட மேலவை) தேர்தல் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் வெள்ளிக்கிழமையன்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதன் பிறகு, இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதன் பேரில் பிலாரி தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ முகமது ஃபஹீமின் உறவினரான முகமது உஸ்மான் மீது மஜோலா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு விருந்தினர் மாளிகை வளாகம் செல்லும் வழியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் தொழுகை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாகச் சென்ற பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை அரசு விருந்தினர் மாளிகையின் பொறுப்பு இளநிலைப் பொறியாளரான அனில் குமார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வைரலான காட்சிப் பதிவில், பிலாரி எம்எல்ஏ முகமது ஃபஹீமின் உறவினரும், மாவட்டத் துணைத் தலைவருமான உஸ்மான், தொழுகை நடத்துவது காணப்படுகிறது.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT