இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா
புதுடெல்லி: இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகமயா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய பார் கவுன்சில் தலைவராக பதவி வகிக்கும் மனன் குமார் மிஸ்ரா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் தொடர்ச்சியாக நீடித்து வருகிறார். இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், முறையான தேர்தலை நடத்தாமல் பார் கவுன்சில் தலைவர் பதவியில் மனன் குமார் மிஸ்ரா நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாக, மனன் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை 2030-ம் ஆண்டு வரை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். பார் கவுன்சிலின் சட்டப்பூர்வ விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பதவிக்கால வரம்புகளை, நிர்வாக அல்லது பொதுக் குழுவின் அறிவிப்பு மூலம் மாற்ற முடியாது. எனவே, மனன் குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்துவிட்டு, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் பார் கவுன்சில் தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும்.
மனன் குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் பட்சத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்திய பார் கவுன்சிலை நிர்வகிக்க ஓர் இடைக்காலக் குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.