புதுடெல்லி: டெல்லியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தும் களமாக அறிவிக்கப்பட்டிருந்த ஜந்தர் மந்தரை அப்பட்டியலில் இருந்து நீக்கி காவல் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன், ஜூலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஜந்தர் மந்தரில் நடத்திய தொடர் போராட்டத்தால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் போராட்டம் நடத்த சிஜேபி அனுமதி கோரியது. ஆனால் டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி காவல் துறை ஆணையர் அனுராக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சிறப்பு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இனிமேல் அனுமதி அளிக்கப்படாது. போராட்ட களம் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முக்தா குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான இடமாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அங்கீகரித்து இருந்த நிலையில், தற்போது அது போராட்ட களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ராம் லீலா மைதானம் புராரி மைதானம், கிழக்கு டெல்லி சி.பி.டி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் களமாக அறிவித்து டெல்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த மூன்று இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கான விரிவான மற்றும் திருத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. ராம் லீலா மைதானம் போராட்டத்துக்கு உகந்த இடமில்லை என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அந்த மைதானத்தை போராட்டத் தளமாக அறிவித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
அதுபோல புதிதாக போராட்டத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள புராரி மைதானம், கிழக்கு டெல்லி சி.பி.டி மைதானம் ஆகிய இடங்கள் டெல்லி குப்பை கிடங்குக்கு அருகே அமைந்துள்ளதை கவனத்தில் கொள்வது அவசியம். போராட்டங்களுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விளக்கங்கள் காவல் துறையின் அறிக்கையில் இல்லை’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.