புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை கோரியும், எஸ்ஐஆர் முறைகேடுகளை சுட்டிக்காட்டியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 14 குறைகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் திங்கட்கிழமை மாலை பேரணியாக சென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தாக்கல் செய்த 11 மனுதாரர்களில் 9 பேருக்கு வக்காலத்து இணைக்கப்படவில்லை என்றும், வழக்கு தாக்கல் செய்வதற்கான நீதிமன்ற கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாக செலுத்தப்பட்டதாகவும், மனுவுக்கான இணைப்பு ஆவணங்கள் இல்லை என்பது உட்பட 14 குறைபாடுகள் உள்ளதை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டி உள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டையின் தெளிவான நகலைக் கோரியுள்ளது. அதுபோல, சவுகதா ராய், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 11 பேரின் வக்காலத்தை தாக்கல் செய்ய கோரியுள்ளது.
மேலும் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்குவது குறித்த தேர்தல் ஆணையத்தின் ஜூன் 24, 2025 தேதியிட்ட முடிவு மற்றும் வாக்காளர் நீக்கங்கள் தொடர்பான பிற பதிவுகளின் பென்-டிரைவில் உள்ள டிஜிட்டல் நகல்கள் உட்பட துணை ஆவணங்களின் தெளிவான நகல்களை கோரியுள்ள உச்ச நீதிமன்ற பதிவகம், தனிப்பட்ட நபர்களான ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளது ஏன்? என்பது குறித்த விளக்கத்தையும் கேட்டுள்ளது.
இவ்வாறான 14 குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இம்மனுவை விசாரணைக்கு பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.