டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் விஜேந்தர் குப்தா
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது, சீக்கிய குரு தேஜ் பகதூரை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இது தொடர்பான வீடியோவை சட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா வெளியிட்டார்.
இதனிடையே ஆதிஷியின் வீடியோவை உள்நோக்கத்துடன் எடிட்டிங் செய்து போலி வீடியோவை வெளியிட்டதாக பஞ்சாப் போலீஸாரால் டெல்லி சட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, பஞ்சாப் டிஜிபி, குற்றப்பிரிவு டிஜிபி மற்றும் ஜலந்தர் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், ‘‘சம்பந்தப்பட்ட வீடியோ டெல்லி பேரவையின் சொத்து. இதை பஞ்சாப் போலீஸார் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். வீடியோ விவகாரத்தில் அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.