புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நேற்று ஒரு முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இதில், ‘தர்பார் மூவ் (இடம் மாறும் அரசு நிர்வாகம்)’ எனப்படும் நிர்வாக இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.
இதன்படி தலைநகரம் ஸ்ரீநகரில் இருந்து, ஜம்முவுக்கு இடம் மாறுகிறது. குளிர்காலத்தை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது. குளிர் காலம் முடிந்த பின் தலைநகரம் மீண்டும் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு இடம் மாற்றப்படும்.
முதல்வர் உமர் நடத்திய இக்கூட்டத்தில், ஜம்முவுக்கு அலுவலகங்களை மாற்றும்போது சுமுகமான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்யுமாறும், அதேநேரம் ஊழியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறும் உத்தரவிட்டார். ஜம்மு-காஷ்மீரில் இந்த மரபு சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.
கடந்த 1872-ல் டோக்ரா ஆட்சியாளரான மகாராஜா குலாப் சிங் ஆட்சி செய்தார். அப்போது அவர் இந்த இடமாற்ற மரபை முதன்முதலாக தொடங்கினார். இதற்கு பள்ளத்தாக்கு பகுதியான ஸ்ரீநகரில் குளிர்காலத்தில் கடும் குளிர் நிலவுவது முக்கியக் காரணமானது. எனவே, குளிர்காலத்தில் நிர்வாகம் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கும், கோடைக்காலத்தில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கும் மாற்றும் மரபு இன்றுவரை தொடர்கிறது.
இந்த மாற்றத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்கள், கோப்புகள், கணினிகள், மேஜைகள் மற்றும் நாற்காலிகள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு மாற்றப்படுகின்றன.
அனைத்து உபகரணங்களும் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜம்முவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதில், சுமார் 10,000 ஊழியர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த இடமாற்றம், மீண்டும் மே மாதத்தின் முதல் வாரத்தில் முடிவடைந்து ஸ்ரீநகருக்குத் திரும்புகிறது. கடந்த ஆகஸ்ட் 2019-ல், அப்போதைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநரால் ரத்து செய்யப்பட்ட இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என உமர் அப்துல்லா உறுதியளித்திருந்தார். அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் அந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்தி உள்ளார்.