அமைச்சரவை முடிவுகள் குறித்து பேசும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படும்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்த புதிய மசோதா 27-ம் தேதி (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிய மசோதா குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார். புதிய மசோதா குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, டெல்லி உயர் நீதிமன்றம் சார்பில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் சார்பில் 2 விரைவுநீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல அனைத்து மாநிலங்களிலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இங்கு 3 முதல் 6 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும்.
தற்போது வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய திருத்தங்கள் செய்து, புதிய மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி வினாத்தாள் கசிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
குழுவாக, கும்பலாக முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். வினாத்தாள் கசிவில் தொடர்பு உடைய கல்வி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும். நீட், ஜேஇஇ, கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் தொடர்பான வினாத்தாள் கசிவு விவகாரங்கள் புதிய மசோதாவின் கீழ் விசாரிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இளைஞர்கள் அதிக நேரம் இருப்பது இன்ஸ்டாகிராமில்தான். எனவே, அரசின் திட்டங்களையும் அதன் வாயிலாகவே இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளை ‘ரீல்ஸ்’ ஆக தயாரித்து பதிவிடவேண்டும்’’ என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நிலையில், ஒரே நாளில் அவரது கணக்கில் 10 லட்சம் புதிய ஃபாலோயர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
செல்பி வீடியோ வெளியிட்ட பிரதமர்: சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி 23-ம் தேதி நள்ளிரவு 11.52 மணிக்கு ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: வினாத்தாள் கசிவு சாதாரண விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவால் மாணவர்களின் ஓராண்டு படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. மிக குறுகிய காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகளுக்காக நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. கடந்த 19-ம் தேதி மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவும் விரைவில் நிறைவேற்றப்படும்.