இந்தியா

இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

மோகன் கணபதி

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (ஏப்.19) இலங்கை செல்கிறார்.

இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (ஏப். 19) இலங்கை செல்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க இருக்கிறார். அவர் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத் தலைவர்களுடனும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்களுடனும் கலந்துரையாட இருக்கிறார்.

ஏப்.19 அன்று பிற்பகலில், கொழும்பில் நடைபெறும் ஒரு சமூக நிகழ்வில், இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் காணொலி வாயிலாக வழங்குகிறார்.

இதன் மூலம், தமிழ் சமூகங்களுக்கான மொத்த வீடுகளின் எண்ணிக்கை 50,000-ஐ எட்டும். மேலும் இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏப். 20 அன்று, குடியரசுத் துணைத் தலைவர் நுவரெலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, இந்திய வீட்டுவசதித் திட்டங்களைப் பார்வையிட்டு, உள்ளூர் தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பயணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிக மற்றும் மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT