இந்தியா

கான்பூர் சொகுசு கார் விபத்து: தொழிலதிபரின் மகன் சிவம் மிஸ்ரா கைது!

வெற்றி மயிலோன்

கான்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த லம்போர்கினி சொகுசு கார் விபத்து தொடர்பாக உள்ளூர் புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) பிற்பகல் 3 மணியளவில் ரூ.10 கோடிக்கும் மேல் மதிப்புள்ள இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார், கான்பூரின் குவால்டோலி பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

          

சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், மோதலுக்கு முன் கார் வேகமாகச் சென்றது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், பவுன்சர்கள் சிலர், விபத்து நடந்த உடனேயே, சிவம் மிஸ்ராவை ஓட்டுநர் இருக்கையிலிருந்து இழுத்து, பின்னர் மற்றொரு காரில் அழைத்துச் செல்வதைக் காட்டுகின்றன.

இந்த நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில் காரை ஓட்டியது சிவம் மிஸ்ரா அல்ல, தாமே என்று கூறி, ஒருவர் சரணடைவதற்காக உள்ளூர் நீதிமன்றத்துக்கு நேற்று சென்றார். இருப்பினும், சிவம் மிஸ்ரா வாகனம் ஓட்டியதை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து, அவரது சரணடைதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

சிவம் மிஸ்ரா டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிவம் மிஸ்ரா உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார் என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT