புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி ஆகியவை புகார் அளித்தன.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அமலாக்கத் துறை கடந்த 6ம் தேதி பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் முறைகேடு உறுதியானதை அடுத்து கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான நிலங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் ரூ.16,310 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.