இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் சகோதரர்கள் கிருஷ்ணா, சீதாராம்.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீதாராம். இவர் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஹரியானாவிலுள்ள தனது சொந்த ஊரிலிருந்து வெளியேறி பிழைப்புக்காக பஞ்சாபுக்குச் சென்றுவிட்டார்.
மாற்றுத் திறனாளியான அவருக்கு பஞ்சாப் மாநில அரசில் டி பிரிவில் வேலை கிடைத்து அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கைக்காக ஹரியானாவின் ஜிந்த் மாவட்டம் மனோகர்பூர் கிராமத்தில் தான் படித்த அரசுப் பள்ளியில் சான்றிதழ் பெறுவதற்காக அண்மையில் சீதாராம் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அவருடைய பள்ளிச் சான்றிதழை அதிகாரிகள் தேடியபோது, அவரது குடும்பம் தொடர்பான தகவல் தெரியவந்தது. அங்குள்ள பள்ளி ஊழியர்கள், சீதாராமின் அண்ணன் கிருஷ்ணாவை தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போதுதான் சீதாராம் உயிருடன் இருக்கும் விவரமே அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணா, உடனடியாக அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரியை (பிஎல்ஓ) தொடர்புகொண்டார். இதன்மூலம் சீதாராம் தனது தம்பிதான் என்பதை உறுதி செய்துகொண்டார் கிருஷ்ணா.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விரைந்து வந்த கிருஷ்ணா, தனது தம்பி சீதாராமை கட்டியணைத்து வரவேற்றார். கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோரும் ஓடிவந்து ஆனந்தக் கண்ணீருடன் சீதாராமை வரவேற்றனர்.
பின்னர் சகோதரர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் சீதாராம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏஇஆர்ஓ) டாக்டர் ரமேஷ் குமார் கூறும்போது, “தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு வாக்காளர் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையால் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்ணன், தம்பி ஆகியோர் இணைந்துள்ளனர். வாழ்க்கையில் பிரிந்திருந்த குடும்பம் தற்போது எஸ்ஐஆர் நடவடிக்கையால் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.