வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

“பிரதமரின் வலுவான ஒருங்கிணைப்புத் திறனை வெளிப்படுத்தியது பிரிக்ஸ் மாநாடு” - ஜெய்சங்கர்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் வலுவான ஒருங்கிணைப்புத் திறனை பிரிக்ஸ் உச்சி மாநாடு வெளிப்படுத்தியது” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 11 உறுப்பு நாடுகள், 10 நட்பு நாடுகள், 4 பிராந்திய அமைப்புகள் மற்றும் ஏழு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குறிப்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலி, எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இதில் குறிப்பிட வேண்டிய முதல் விஷயம், பிரதமர் மோடியின் வலுவான ஒருங்கிணைப்புத் திறன் ஆகும். நாடுகளின் தலைவர்கள் மிகவும் வெளிப்படையான மற்றும் சுமூகமான உரையாடல்களில் ஈடுபட இந்த உச்சிமாநாடு வாய்ப்பளித்தது.

உலகில் பெரும் மோதல்கள் மற்றும் ஆழமான பிளவுகள் உள்ள சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெற்ற போதிலும், மிகவும் கடினமான சில விவகாரங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் இந்தியா வெற்றி பெற்றது.

அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால புரிதல் ஆகியவற்றின் அவசியத்தை பிரிக்ஸ் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேவேளையில், உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி ஆகியவற்றின் தடையற்ற விநியோகம் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றையும் அவர்கள் வலியுறுத்தினர்.

பொருளாதாரம், மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 'குளோபல் சவுத்' வளரும் நாடுகளுக்காகக் குரல் கொடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை பிரிக்ஸ் அமைப்பு தெளிவாக உணர்த்தியது.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் ஒரு குற்றச் செயல் என்பதில் பிரிக்ஸ் அமைப்பு மிகத் தெளிவாக இருந்தது. பஹல்காமில் நடந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அவர்கள் வெளிப்படையாக அங்கீகரித்தனர்” என்றார்

SCROLL FOR NEXT