நடியாத்: குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்துள்ளனர். அதில் குறைகள் இருப்பதாக கூறி சரக்கு வாகனத்தை ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அமர்நாத் கோவர்தன் ராம் சரோஜ், ஆய்வாளர் சுபோத் சுபாஷ் சவுகான் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சரக்கு வாகனத்தின் உரிமையாளர், மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) அதிகாரிகளை 1064 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஜிஎஸ்டி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து காந்திநகர் ஏசிபி அதிகாரிகள் ஜிஎஸ்டி அதிகாரிகளைக் கையும் களவுமாக பிடிக்க வலை விரித்தனர்.
வாகன உரிமையாளரிடம், ஜிஎஸ்டி அதிகாரிகள் கேட்டபடி ரூ.10 லட்சத்தை முன்பணமாக வழங்கும்படி கூறியுள்ளனர். அதன்படி ஜிஎஸ்டி அதிகாரிகளை தொடர்பு கொண்ட சரக்கு வாகன உரிமையாளர் ரூ.10 லட்சத்தை எங்கு கொண்டு வந்து தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர்கள் அலுவலகத்துக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து வாகன உரிமையாளர் ஜிஎஸ்டி பவன் சென்று கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளரை சந்தித்து முன் பணம் ரூ.10 லட்சத்தை வழங்கினார். அவர் வெளியே வந்ததும், அங்கு நுழைந்த ஏசிபி அதிகாரிகள் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அமர்நாத் கோவர்தன் ராம் சரோஜ், ஆய்வாளர் சுபோத் சுபாஷ் சவுகான் ஆகியோரை கைது செய்து ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குஜராத் நடியாத் நகரில் உள்ள ஜிஎஸ்டி பவன் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு முன் முறைகேடுகளில் ஈடுபட்டனரா என்பது குறித்து ஏசிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.