புதுடெல்லி: மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாக பெற்ற இதயம் 85 நிமிடங்களில் 98 கி.மீ தூரத்துக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
ஹரியானாவின் ரோதக் நகரில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் 37 வயது நபர் ஒருவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டார். அவர் மூளைச் சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
டெல்லி ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மையத்தில் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். இதனால் ரோதக் நகரில் இருந்து இதயத்தை எடுத்து ஓக்லா கொண்டு சென்று பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ரோதக் மற்றும் ஓக்லா இடையோன தூரம் 98 கி.மீ. ஆகும். தானமாக பெறப்படும் இதயத்தை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பொருத்த வேண்டும். எனவே இதை விரைவாக கொண்டு செல்ல போக்குவரத்து போலீஸாரின் உதவி நாடப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து இதயத்தை எடுக்கும் அறுவை சிகிச்சையை மதியம் 2.20 மணிக்கு தொடங்கிய மருத்துவர்கள் 2.50 மணிக்கு முடித்தனர்.
அதன்பின் ரோதக் நகரிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இதயம் மாலை 4.15 மணிக்கு டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தடையற்ற போக்குவரத்தை போலீஸார் செய்து கொடுத்தனர். இதனால் 85 நிமிடத்தில் தானமாக பெற்ற இதயம் கொண்டு செல்லப்பட்டு, இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபருக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினர்.
மற்ற உடல் உறுப்புகள்.. மூளைச்சாவு அடைந்த நபரின் மற்ற உடல் உறுப்புகள் இதர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பலருக்கு பொருத்தப்பட்டது. நுரையீரல் ஆர்டிமிஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கல்லீரல் மற்றும் கணையம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை ரோதக் பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையிலேயே பிற நபர்களுக்கு பொருத்தப்பட்டது. ஒருவரின் உடல் உறுப்பு தானம், பல பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.