போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் உடல் உறுப்புகளான விந்தணுப்பை உள்ளிட்டவற்றை விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த ஒரு கும்பல் இதை நம்பி, 17 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளது.
மசூதி, தர்கா போன்ற இடங்களில் பேனா மற்றும் சாவி கொத்துகளை விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்த ரேஹன், கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆவார். பிபிஏ மாணவரான ஜோஹெப் கான் என்பவர் தான் ஒரு மருத்துவர் என பொய் சொல்லி, கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நண்பர்களை நம்ப வைத்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய ஒரு கும்பல், கடந்த 6-ம் தேதி ரூ.100 தருவதாக ஆசை காட்டி ரேஹனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று தலையில் பின்புறமாகத் தாக்கி, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.
அதன்பிறகு சடலத்திலிருந்து உறுப்பை அகற்றி விநியோகிக்க முயன்றபோதுதான், உறுப்புகளை விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதற்கான ஆதாரமோ அல்லது அதை வாங்குவதற்கான வாடிக்கையாளரோ இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ரேஹனின் தாய் கொடுத்த புகாரையடுத்து விசாரணை நடத்தி கொலையானது சிறுவன் ரேஹன் என்பதை உறுதிசெய்தனர். மேலும், இந்த வழக்கில் போலி மருத்துவர் ஜோஹேப் கான், ஆமீர் குரேஷி உட்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.