ஹக்ராமா மொஹிலாரி
குவாஹாட்டி: அசாமில் பரம எதிரியாக இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி கட்சித் தலைவர் பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அசாம் சட்டப் பேரவையில் உள்ள 126 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த தலைவர் ஹக்ராமா மொஹிலாரி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது அக்கட்சியின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஹக்ராமா மொஹிலாரி, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவர் ஏன் பாஜகவில் இணைந்தார் என்று அரசியல் நிபுணர்கள் புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஏனெனில் கடந்த 2021-ல் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும், ஹக்ராமா மொஹிலாரிக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போதைய தேர்தலில் பாஜக, போடோலாந்து மக்கள் முன்னணியை அழைத்து கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பகை தற்போது விலகிவிட்டது.
இதுகுறித்து குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவு ஆராய்ச்சிப் பிரிவு நிபுணர் மிருதுகுஞ்சன் தேகா கூறும்போது, “அசாமில் பிரபலமான பழங்குடியினப் பிரிவு தலைவராக ஹக்ராமா மொஹிலாரி விளங்குகிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் அதிக அளவில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளார்.
அதனால்தான் பாஜக, அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதன்மூலம் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளைப் பெற முடியும் என பாஜக கணக்குப் போடுகிறது" என்றார்.