அமெரிக்க நிறுவனத்தின் ‘புளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக் கோளை சுமந்து கொண்டு, இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து நேற்று சீறிப் பாய்ந்தது. படம்: பிடிஐ

 
இந்தியா

இந்தியாவின் பாகுபலி ராக்கெட் மூலம் இஸ்ரோ சாதனை: அதிக எடை செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்க நிறுவனத்தின் அதிக எடை கொண்ட புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம், இஸ்ரோ வரலாற்றில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல்(நியூஸ் ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த செயற்கைக்கோள் அதிக எடை கொண்டது என்பதால், இந்தியாவின் பாகுபலி ராக்கெட்டான எல்விஎம் 3 மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இதன் இறுதிக்கட்ட பணிகளுக்கான 24 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் 3 எம்-6 ராக்கெட் நேற்று காலை 8.55 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளிக் கழிவுகள் இடையேயான மோதலை தவிர்க்க ராக்கெட் 90 வினாடிகள் தாமதமாக ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட சுமார் 16 நிமிடங்களில், ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் புளூபேர்ட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த வெற்றியின் மூலம் 1993-ம் ஆண்டு முதல் இதுவரை 34 வெளிநாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட இந்த புளூபேர்ட் செயற்கைக்கோள், சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. விண்வெளியில் இருந்து நேரடியாக செல்போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவது தான் இதன் பிரதான நோக்கம். இதன்மூலம் சிக்னல் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி போன்ற சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோளாகும். இதனால் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்விஎம் 3 ராக்கெட்டின் 9-வது தொடர்ச்சி யான வெற்றிகரமான பயணம் இதுவாகும். இதன் மூலம் எல்விஎம் 3 ராக்கெட் 100 சதவீத நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. ஏற்கெனவே சந்திரயான்-3, ஒன் வெப் செயற்கைக்கோள்கள் போன்ற பல்வேறு திட்டங்களையும் எல்விஎம் 3 வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுதலிலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை, திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அருகில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளோம்.

இதன் மூலம் உலக அரங்கில் கவனிக்கக் கூடிய நிறுவனமாக இஸ்ரோ மாறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு இஸ்ரோவை தொடர்பு கொண்டு வருகின்றன. இந்த வெற்றி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. மேலும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடிந்து, 2027 மார்ச் மாதத்துக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.இவ்வாறு வி.நாராயணன் கூறினார்.

SCROLL FOR NEXT