சென்னை, மும்பை, கொல்கத்தாவில் வசிப்பவர்கள் உயில்களை ‘மெய்ப்பிக்க’ நீதிமன்றம் செல்ல வேண்டியது இல்லை

தாமாக முன்வந்து மெய்ப்பித்துக் கொள்வது அறிவார்ந்த செயல் என சட்ட நிபுணர்கள் விளக்கம்
சென்னை, மும்பை, கொல்கத்தாவில் வசிப்பவர்கள் உயில்களை ‘மெய்ப்பிக்க’ நீதிமன்றம் செல்ல வேண்டியது இல்லை
Updated on
2 min read

சென்னை: மத்​திய அரசின் புதிய சட்​டத்​திருத்த மசோ​தா​வின்​படி சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா​வில் வசிக்​கும் மக்​கள் வாரிசுரிமை சட்டத்தின்​கீழ் உயில்​களை மெய்ப்​பிக்க நீதி​மன்​றம் செல்ல வேண்​டிய கட்டா​யம் இல்லை என்​றாலும் விரும்​பி​னால் தாமாக முன்​வந்துமெய்ப்​பித்​துக்கொள்​வது அறி​வார்ந்த செயல் என் சட்ட நிபுணர்​கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

பொது​வாக உயில் என்​பது ஒரு​வர் தனது இறப்​புக்குப்​பிறகு தனது சொத்​துக்​கள் மற்​றும் உடைமை​கள், பொறுப்​பு​கள் யார், யாருக்​குச் செல்ல வேண்​டும், அதை எப்​படி பங்​கிட வேண்​டும் என்​பதை சட்​டப்​படி எழுதி வைக்​கும் ஒரு ஆவண​மாகும். இது சொத்​துரிமை தொடர்​பான சண்​டைகளைத் தவிர்க்​க​வும், தனது விருப்​பங்​களை நிறைவேற்​ற​வும், சொத்​து​களை நிர்​வகிக்​கும் பொறுப்​பாளரை நியமிக்​க​வும் சட்​டரீ​தி​யாக உதவு​கிறது.

‘வில் புரோபேட்’ எனப்​படும் எழுதப்​பட்ட உயிலை மெய்ப்​பித்​தல் என்பது ஒரு​வர் எழுதி வைத்​துள்ள உயில் சட்​டப்​பூர்​வ​மாக செல்​லுபடி​யாகும் என்​பதை நீதி​மன்​றம் மூலம் உறு​திப்​படுத்​தும் ஒரு சட்ட செயல்​முறையாகும். மெய்ப்​பித்​தல் என்ற நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அந்த உயிலுக்கு உரிய சட்​டஅங்​கீ​காரம் கிடைக்​கிறது. இவ்​வாறு மெய்ப்​பித்​தால் மட்​டுமே வாரிசுகளுக்​கிடையே ஏற்​படும் சொத்து தகராறுகள், தேவையற்ற வழக்​கு​கள் தவிர்க்​கப்​படு​வதோடு எழுதி வைத்​தவரின் நோக்​க​மும் நிறைவேறும்.

இந்​திய வாரிசுரிமை சட்​டத்​தின் (1925) பிரிவு 213-ன்​கீழ் ஆங்கிலேயர்​கள் காலத்​தில் பழமை​யான பிரசிடென்சி நகரங்​களாக இயங்கி வந்த சென்​னை, மும்​பை, கொல்​கத்தா ஆகிய பெருநகரங்​களில் வசிக்​கும் இந்​துக்​கள், சீக்​கியர்​கள், பவுத்​தர்​கள்,சமணர்​கள், பார்​சி​யர்​கள் மட்​டும் தங்​களது சொத்​துகள் இந்த பெருநகர எல்​லைக்​குட்​பட்ட பகு​திக்​குள் இருந்​தாலோ அல்​லது இந்த பெருநகர எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தாலோ தாங்​கள் எழுதி வைத்த உயிலை நீதி​மன்​றத்​தில் மெய்ப்​பிப்​பது கட்​டா​யம் என்று இருந்​தது.

ஆனால் இந்த 3 பெருநகரங்​களைத் தவிர்த்து இந்​தி​யா​வின் மற்ற பகு​தி​களில் வசிப்​பவர்​களுக்கு இது​போன்ற எந்​தவொரு கட்​டாய​மும் இல்​லை. இந்த காலனித்​துவ பாகு​பாட்டை அகற்​றும் வகை​யில் தற்​போது மத்​திய அரசு சென்​னை, மும்​பை, கொல்​கத்தா எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் வசிப்​பவர்​களுக்​கான இந்த 213-வது சட்​டப்​பிரிவை அறவே நீக்​கி​யுள்​ளது. இதன்​மூலம் உயில்​களை மெய்ப்​பிக்க நீதி​மன்​றங்​களுக்​குச் செல்ல வேண்​டிய கட்​டா​யம் இல்​லை. இதற்​காக நீதி​மன்ற கட்​ட​ண​மாக சொத்து மதிப்​பில் 2 முதல் 5 சதவீதம் வரை செலுத்தவேண்​டிய தேவையும் இல்​லை. உயில் அங்​கீ​காரம் பெறுவதற்கான வழக்குதொடர்ந்து நீண்ட காலம் காத்​திருக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை.

ஆனால் இது​போல உயில்​களை மெய்ப்​பித்​தல் சட்​டப்​படி கட்​டா​யம் இல்லை என்​றாலும், வரும் காலத்​தில் பிரச்​சினை ஏற்​படும் எனக் கருதினால், அல்​லது விரும்​பி​னால் தாமாக முன்​வந்து மெய்ப்​பித்​துக்கொள்​ளலாம் என்​கின்​றனர் சட்ட நிபுணர்​கள். இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் கூறியது: மத்​திய அரசு தற்​போது வாரிசுரிமை சட்​டத்​தின் பிரிவு 213-ஐ மட்​டுமே நீக்​கி​யுள்​ளது. ஆனால் அதனுடன் தொடர்​புடைய 57(2) என்ற பிரி​வில் கைவைக்​க​வில்​லை. இந்த பிரி​வானது இந்த 3 நகரங்​களி​லும் எப்​போது, எந்த சூழ்​நிலை​யில் அந்த உயிலை மெய்ப்​பிப்​பது கட்​டா​யம் என வரையறை செய்​கிறது. பெரும்​பாலான சூழலில் அது கட்​டாயமில்லை என்ற விதி​விலக்​கும் வாரிசுரிமை சட்​டத்​தில் உள்​ளது. இதனால் இந்த 3 நகரங்​களி​லும் உயில்​களை மெய்ப்​பித்​தல் என்​பது கட்​டாய​மான​தா, இல்​லையா என்ற மற்​றொரு குழப்​பம் நீடிக்​கிறது.

ஆனால் வங்​கி​கள், நிதி நிறு​வனங்​கள், கூட்​டுறவு சங்​கங்​கள் தங்​களின் விதி​முறை​களின்​படி உயில் சட்​டப்​படி நீதி​மன்​றத்​தில் மெய்ப்​பிக்​கப்​பட்டு இருந்​தால் மட்​டுமே டிபாசிட் தொகை​யையோ அல்​லது பங்​கு​களையோ வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கும். குடும்ப உறுப்​பினர்​கள் வெளி​நாடு​களில் வசித்​தால் பிற்​காலத்​தில் சொத்​துரிமை கோரு​வ​தில சிக்​கல் வராமல் இருக்க உயில்​களை மெய்ப்​பித்​துக் கொள்​வதும் பாது​காப்​பானது.

அதே​போல, பிரிவு 213 நீக்​கம் தொடர்​பான சட்டத்திருத்​தம் முன்​தே​தி​யிட்டு அமல்​படுத்​தப்​பட​வில்லை என்​ப​தால் ஏற்​கெனவே நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள உயில் தொடர்​பான வழக்​கு​கள் தொடர்ந்து நடை​பெறும். தற்​போதுபிரிவு 213 நீக்​கப்​பட்​டுள்​ள​தால் இனி இந்த 3 பெருநகரங்​களில் வசிப்​போர் உயில்​களை மெய்ப்​பிக்க நீதி​மன்ற படியேறு​வது கட்​டாயம் இல்​லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, மும்பை, கொல்கத்தாவில் வசிப்பவர்கள் உயில்களை ‘மெய்ப்பிக்க’ நீதிமன்றம் செல்ல வேண்டியது இல்லை
திட்டக்குடி அருகே கார்கள் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in