புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தாமரை சின்னத்தை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்கும் என்றும், தேர்தல் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களே முதல்வரை முடிவு செய்வார்கள் என்றும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தலில் பாஜகவின் முகம் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மவுரியா, “தேர்தல் நேரத்தில் பாஜகவின் முகம் தாமரை மலர்தான். தாமரை மலரை முன்னிறுத்தியே நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்.
தேர்தல் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஒன்று கூடி ஆலோசிப்பார்கள். அப்போது கட்சியின் மத்திய பார்வையாளர்கள் வருவார்கள். அந்த ஆலோசனையின் அடிப்படையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுபவரே தலைமை ஏற்பார். தற்போது யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் வருவாரா அல்லது வேறு ஒருவரா என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. அப்போது தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்களே முடிவு செய்வார்கள்” என்றார்.
யோகி ஆதித்யநாத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “ஆம் நான் ஆதரிக்கிறேன்” என அவர் பதிலளித்தார்.
முதல்வர் பதவிக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “இதை எந்த ஒரு தனிநபரும் தீர்மானிப்பதில்லை. எங்களிடம் ஒரு முறையான கட்டமைப்பு உள்ளது. தேர்தல் முடிந்ததும் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க மத்திய பார்வையாளர்கள் வருவார்கள். என்ன நடக்கும் என்பது 2027ல் உங்களுக்கே தெரிந்துவிடும்.” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை மட்டுமே அளிக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மவுரியா, “காங்கிரஸ் கட்சிக்கு அதன் பலத்தை சமாஜ்வாதி கட்சி காட்டிவிட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சிக்கு தனது பலத்தைக் காட்டும். அவர்களுக்கு இடையே கூட்டணி முடிவானாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அது எங்களது வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.
இண்டியா கூட்டணி இணைந்து போட்டியிட்டாலும், தனித்தனியாகப் போட்டியிட்டாலும் அவர்களுக்கு முழுமையான தோல்வி உறுதி. அதேபோல், மூன்றாவது முறையாக பாஜக அரசு அமைவதும் உறுதி. உத்தரப் பிரதேசத்தில் 2047 வரை அவர்களுக்கு எதிர்காலம் இல்லை.
மொத்த வாக்குகளில் 60 சதவீதம் எங்களுடையவை. மீதமுள்ள 40 சதவீதம் பிரிந்துள்ளன. அதிலும் எங்களுக்கு ஒரு பங்கு உள்ளது. ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில் டபுள் இன்ஜின் அரசு, அனைவருடனும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது” என தெரிவித்தார்.