

புதுடெல்லி: இந்தியா முன்னேறுவதை உலகின் எந்த சக்தியும் விரும்பவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், பத்ம விருது பெற்றவர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் பொதுமக்கள் உரையாடும் நிகழ்ச்சியை ஞான யக்ஞம் எனும் அமைப்பு நடத்தியது. பத்ம திருவிழா என்ற பெயரிலான இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “இந்தியா முன்னேறுவதை உலகில் எந்த சக்தியும் விரும்புவதில்லை. ஏனெனில், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே தேடுகிறார்கள். வலிமையானவை மட்டுமே பிழைத்திருக்கும் என்ற கொள்கையை நம்பி, மற்ற அனைவரையும் அழுத்தத்துக்கு உள்ளாக்க நினைக்கிறார்கள்.
இந்தியா வளர்ச்சி அடைந்தால் இவர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில், இந்தியா அனைவருக்கும் உதவ விரும்புகிறது. தன்னை வெறுக்கும் அண்டை நாடுகளுக்குக் கூட இந்தியா உதவுகிறது” என தெரிவித்தார்.
மேலும் அவர், “இன்றைய இளம் தலைமுறை அடிமைத்தனத்தின் தாக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளது. யாராவது உண்மையை நேர்மையாகப் பேசினால், இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக நிற்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பொய்களைப் பிடிக்காது. அவர்கள் தங்கள் நாட்டை சிறந்த நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.” என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முப்படைகளின் தலைவர் (சிடிஎஸ்) அனில் சவுகான், “2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அதேநேரத்தில் அதன் பலன்களையும் அவர்களே அதிகம் பெறுவார்கள். இந்த கனவை நனவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நமது கடந்தகால வெற்றிகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு நமது அறிவுசார் ஆற்றலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தற்போதைய உலகளாவிய பாதுகாப்புச் சூழலை உற்றுநோக்கினால், அது மிகவும் உணர்திறன் மிக்க காலகட்டத்தில் இருப்பதையும், உலக அளவில் ஒரு சமநிலையின்மை நிலவுவதையும் காண முடிகிறது. இந்த காலகட்டத்தில் உலகளாவிய அதிகாரச் சமநிலை மாறி வருகிறது. எந்தவொரு வளர்ந்த நாடும், இந்தியா ஒரு வெற்றிகரமான, வளர்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நாடாக உருவெடுப்பதை விரும்பாது. எனவே அவர்கள் நமது பாதையில் தடைகளை உருவாக்கக்கூடும்.” என தெரிவித்தார்.
மேலும் அவர், ஆனால், வெளிப்புற அச்சுறுத்தல்களைவிட உள்நாட்டு அச்சுறுத்தல்களே அதிக ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ளார்.