புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 21 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 1977-ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனசங்கம் ‘ஜனதா கட்சியுடன்' இணைந்தது. எனினும் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளின் காரணமாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி 'பாரதிய ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டது. கடந்த 1984-ல் இரண்டு மக்களவை தொகுதிகளுடன் பாஜகவின் பயணம் தொடங்கியது.
இவர்களில் ஒருவர், குஜராத்தின் ஏ.கே.படேல். மற்றொருவர் ஆந்திராவின் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த ஜங்கா ரெட்டி ஆவார். பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை, இந்தியாவின் தேசிய மலர். 1857-ல் நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போரின் போது, ரொட்டி மற்றும் தாமரை முக்கியச் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
இவற்றில், தாமரையை சின்னமாக்கி அதை இந்தியப் பண்பாடு மற்றும் தேசியப் பெருமையுடன் பாஜக தொடர்புபடுத்தி பார்க்கிறது. பிற கட்சிகளுடனான சித்தாந்த ரீதியிலான தொடர்புகளின் விளைவாகவே பாஜக உருவானது. இதன் சித்தாந்தங்களை 1951-ல் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜனசங் மூலம் வளர்த்தார்.
மத்தியில் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசாக பாஜக உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முழுமையான ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை (1999-2004) நிறைவு செய்த பாஜக பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் திகழ்ந்தார்.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடங்கியது. தற்போது மூன்றாவது பதவிக் காலத்தை அவர் தொடர்கிறார். மிக நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங்கின் 8,930 நாட்கள் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சுமார் 18 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது. நாட்டின் மிகுந்த செல்வம் கொண்ட கட்சியாகவும் கருதப்படுகிறது. ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையின்படி, 2024- 25 நிதியாண்டில் கட்சியின் வருமானம் ரூ.6,769 கோடி ஆகும். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
மேலும் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, மிசோரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், பிஹார் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லது என்டிஏ அரசுகள் ஆட்சியில் உள்ளன.
தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக தீவிரமாக களமிறங்கி உள்ளது. தமிழ்நாட்டில், அதிமுகவுடன் இணைந்து ஆட்சிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தீவிரம் காட்டி வருகிறது.