கொச்சி: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கும் காங்கிரஸுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு அதிகாரப் பகிர்வில்தான் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் இன்று (ஜனவரி 19) நடைபெற்ற மகா பஞ்சாயத்து மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அண்மையில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிபெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கும் காங்கிரஸுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு அதிகாரப் பகிர்வில்தான் உள்ளது. அவர்கள் அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அவர்கள் மக்களின் குரலை ஒடுக்க நினைக்கிறார்கள். ஆனால் நாம் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கிறோம்" என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், "நமது இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கேரள இளைஞர்கள் வெளிநாடுகளில் செய்யும் அதே பணிகளை இங்கேயே செய்யும் வகையிலான தொலைநோக்குத் திட்டத்தை காங்கிரஸ் கூட்டணி உருவாக்கும்" என்று உறுதியளித்தார்.