மும்பையில் தாக்கரே சகோதரர்களின் ‘மண்ணின் மைந்தர்கள்’ கோஷம் தோல்வி!

மாநகராட்சித் தேர்தலில் மராத்தி அல்லாத 80 கவுன்சிலர்கள் தேர்வு!
மும்பையில் தாக்கரே சகோதரர்களின் ‘மண்ணின் மைந்தர்கள்’ கோஷம் தோல்வி!
Updated on
2 min read

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தலில் தாக்கரே சகோதரர்களின் 'மண்ணின் மைந்தர்கள்' கோஷம் தோல்வி அடைந்துள்ளது. மும்பை மாநகராட்சியில் கடந்த தேர்தலை விட இந்த முறை அதிகமாக 80 மராத்தி அல்லாதவர்கள் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கூட்டணி அமைத்தனர். இதன் அடிப்படையாக, மண்ணின் மைந்தர்களான மராத்தி மக்கள், மராத்தி மொழி எனக் கோஷமிட்டனர்.

தலைநகரான மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கும் சதியை பாஜக செய்வதாகவும், மும்பையின் மேயராக மராத்தி அல்லாதவரை நியமிக்க பாஜக விரும்புவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதன் மூலம், மும்பையின் மராத்தி பேசும் வாக்காளர்களை ஒன்று திரட்டி எளிதாக வென்று விடலாம் எனவும் தாக்கரே சகோதரர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தமுறை 227 உறுப்பினர்களைக் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் புதிய எதிர்பார்ப்பு கிளம்பியது.

கடந்த காலங்களை விட அதிக அளவிலான மராத்தி பேசுபவர்களே கவுன்சிலர்களாக தேர்வாவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், இந்த முறை மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதர்களின் எண்ணம் பலிக்கவில்லை.இருவரும் மேடைகள் தோறும் எழுப்பிய கோஷங்கள் முற்றிலுமாகத் தோல்வி அடைந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தேர்தல் முடிவில் இதுவரை இல்லாத வகையில் 80 மராத்தி பேசாத கவுன்சிலர்கள் தேர்வாகி விட்டனர்.

இது, இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2017-ல், 72 மராத்தி பேசாத கவுன்சிலர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், பாஜகவில் 36 கவுன்சிலர்கள் இருந்தனர். இந்த முறை, பாஜகவில் அதிகபட்சமாக 38 மராத்தி அல்லாத கவுன்சிலர்கள் உள்ளனர்.

காங்கிரஸில் வென்ற 24 கவுன்சிலர்களில் 18 பேர் மராத்தி அல்லாதவர்கள். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியில் 8 பேரும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியில் இருவரும் மராத்தி அல்லாதவர்கள். பாஜக உடன் கூட்டணியாகப் போட்டியிட்ட ஆளும் கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் 29 பேரில் மூன்று பேர் மராத்தி அல்லாத கவுன்சிலர்கள் இருக்கின்றனர். மும்பை மாநகராட்சியின் புதிய மன்றத்தில் தேர்வான மராத்தி அல்லாத கவுன்சிலர்களின் இந்த எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகம்.

இது குறித்து பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளரான பிரேம் சுக்லா கூறுகையில், “இந்த கூடுதல் எண்ணிக்கை மும்பையின் மாறிவரும் சமூக இயக்கவியலைப் பிரதிபலிக்கிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மராத்தி அல்லாத கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மும்பையின் தன்மையே காரணம். மும்பை ஓர் உண்மையான பன்மொழி பேசும் உலகளாவிய நகரமாகும். இது அனைத்து சமூகங்கள், சாதிகள் மற்றும் இனங்களையும் உள்ளடக்கியது. இதனால்தான் மும்பை மாநகராட்சியில் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

பெரோஸ்ஷா மேத்தா போன்ற ஒரு மேயரை பெருமையாகக் கொண்டது மும்பை மாநகராட்சி. மேத்தாவைப் போல், யாருடைய மூதாதையர்கள் ஈரானில் இருந்து குடிபெயர்ந்து இங்கு குடியேறினார்களோ, அங்கு மொழியியல் என்ற பெயரில் பகை அரசியலை முன்னெடுப்பதன் மூலம் யாரும் வெற்றிபெற முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

தாக்கரே சகோதர்களின் முரண்: மராத்தி அரசியலை நம்பிக் களம் இறங்கிய தாக்கரே சகோதர்களின் வேட்பாளர்கள் தேர்வும் முரணாக இருந்தன. அவர்கள் மராத்தி அல்லாதவர்களுக்கும் தம் கட்சிகள் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்தனர்.

மராத்தி அல்லாதவர்கள்: இதனால், தேர்தல் முடிவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா (யுபிடி) கட்சியின் 65 பேரில் 6 பேர் மராத்தி அல்லாதவர்கள். ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியின் ஆறு பேரில் ஒருவர் மராத்தி அல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தாக்கரே சகோதரர்களின் ‘மண்ணின் மைந்தர்கள்’ கோஷம் தோல்வி!
சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை: வங்கதேச அரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in