புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது என ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ராகுல் பேசியதாவது:
அனைவருக்கும் சம உரிமையை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிக்க பாஜக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதன் மீது முழு அளவிலான தாக்குதலை தொடுத்துள்ளது. தனது அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்புவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதற்காக, நாட்டின் அரசியல் சாசன அமைப்புகளை பாஜக கைப்பற்றி உள்ளது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடந்ததாக நான் உணரவில்லை. வாக்கு திருட்டு மூலமே அவர்கள் வெற்றி பெற்றனர். மேலும், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கியது. அதற்காக அவற்றை தன்னுடைய ஏவலுக்கானது என்று கருதவில்லை. அந்த அமைப்புகள் தேசத்துக்கானவை என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், பாஜக அந்த அமைப்புகளை தனது சொந்த அமைப்புகளாகப் பார்க்கிறது. அதனால்தான் அவற்றைக் கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றது.
சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை அரசின் ஆயுதங்களாகிவிட்டன. பாஜக மற்றும் எதிர்க்கட்சியினர் மீது அந்த அமைப்புகள் எத்தனை வழக்குகளை பதிவு செய்திருக்கின்றன என்பதைப் பார்த்தாலே இது புரியும்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை சித்தாந்தத்தை எதிர்க்கிறது. அதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் வரும்போது அதை வெளிப்படுத்துவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.
நம்பிக்கையை இழந்த ராகுல்: இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராகுல் காந்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவிட்டார். இண்டியா கூட்டணி கட்சியினர், சொந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கூட ஒருவர் பின் ஒருவராக ராகுலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால்தான் அவர் மீண்டும் ஒரு முறை வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்” என்றார்.