புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 54 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.60 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அவரது மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ.11 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு யார் நிதியளித்தனர் என்பதை அவரும், காங்கிரஸ் கட்சியும் வெளிப்படுத்த வேண்டும்.
எப்சிஆர்ஏ சட்ட விதிகளின்படி ஒரு எம்.பி.யோ அல்லது அரசு அதிகாரியோ வெளிநாடு செல்லும் போது அதற்கான நிதியை ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வழங்கினால், அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஒருவர் தனது சொந்தச் செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால், அந்த விவரத்தை வருமான வரித் தாக்கலின்போது கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விவரம் மறைக்கப்பட்டு இருந்தால் அவர் மீது 2015ம் ஆண்டு கருப்புப் பணச் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.