புதுடெல்லி: ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ரூ.529 கோடி செலவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் பாதிக்கும் அதிகமாக அக்கட்சி செலவிட்டுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிந்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் செலவின விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் செய்த செலவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இவற்றில் மிக அதிகமாக செலவிட்ட கட்சியாக பாஜக உள்ளது. இது 5 மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.529 கோடி செலவிட்டதாக, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது அக்கட்சியின் வங்கிக் கணக்கில் ரூ.7,689 கோடி இருப்பு உள்ளது. இந்த 5 மாநிலத்தேர்தல்களின்போது கட்சிக்கு ரூ.1,494 கோடி நன்கொடை கிடைத்தது. இதன்மூலம், நாட்டிலேயே மிகவும் பணக்காரக் கட்சியாக பாஜக திகழ்கிறது.
பாஜக செய்த செலவில் பாதிக்கும் மேல் மேற்குவங்க தேர்தலுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. மொத்த செலவான ரூ.529.38 கோடியில் இம்மாநிலத்துக்கு மட்டும் ரூ.286 கோடி செலவிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அசாமில் ரூ.96.26 கோடியும், கேரளாவில் ரூ.82.67 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ரூ.95.52 கோடியைச் செலவிட்டது. அதேபோல அசாமில் ரூ.30 கோடியும், கேரளாவில் ரூ.27.67 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.7 கோடியும், புதுச்சேரியில் ரூ.3.20 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூ.27.65 கோடியும் காங்கிரஸ் செலவிட்டது.