புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில், திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியதற்கு, “எங்களுக்கு தேசப்பற்று பற்றி பாடம் எடுக்க தேவையில்லை” என திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி தந்து சில கருத்துகளை முன்வைத்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அப்போது தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதத்தின்போது, திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டினார்.
“இந்த மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக ஏன் இவ்வளவு கூச்சலிட வேண்டும்? அவர்கள் சிந்தும் கண்ணீர் முதலைக் கண்ணீர் மட்டுமே.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதை மேலும் தாமதப்படுத்தவும், சீர்குலைக்கவும், எதிர்க்கவும் எதிர்க்கட்சிகள் ஒரு புதிய வாதத்தையும், புதிய சாக்குப்போக்கையும் முன்வைத்துள்ளன. அவர்கள் முன்வைத்துள்ள அந்தப் புதிய சாக்குப்போக்கு, தொகுதி மறுவரையறைப் பணிக்கு எதிராக அவர்கள் தெரிவிக்கும் வாதங்கள் அனைத்தும் அடிப்படை அற்ற எதிர்ப்பே ஆகும்.
தொகுதி மறுவரையறை என்பது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு அல்ல. அரசியலமைப்புச் சட்டம் என்ன கட்டளையிடுகிறதோ, அதை மட்டுமே நாங்கள் முழுமையாகப் பின்பற்றுகிறோம்” என்று தேஜஸ்வி சூர்யா பேசினார்.
அப்போது உடனடியாக தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். மற்ற மாநிலங்களை விட இந்த நிதி அதிகம்.
1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக, தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு ரூ.100 கோடி வழங்கியது. தேசப்பற்றை பற்றி அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை. நாங்களும் தேசத்துக்காகவே நிற்கிறோம்.
நீங்கள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும்போதும், மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காதபோதும், அதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று ஆ.ராசா கூறினார்.